ஒரு பெண் திருமணம் செய்வதாக இருந்தால் அவள் சார்பில் ஒரு ‘வலி’ – பொறுப்பாளர் அவசியமாகும். இதுதான் பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடாகும். ஹனபி மத்ஹப் சார்ந்தவர்கள் இதற்கு மாற்றமாக ஒரு பெண் தானாகவே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற கருத்தில் உள்ளனர். இந்தக் கருத்து வலுக்குன்றிய “ஷாத்” – (அரிதான) கருத்தாகும். இலங்கை முஸ்லிம் தனியார் சட்ட சீர் திருத்தத்தில் பெண்ணுக்கு ‘வலி’ அவசியம் இல்லை என்ற நிலைப்பாட்டை நிலைநாட்ட சிலர் முயற்சிக்கின்றனர்.
சீர்திருத்தம் என்றால் பிழையை சரியாக்க வேண்டும். பாதிப்புள்ள சட்டத்தை மாற்றி பாதிப்பு இல்லாத சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். இருக்கின்ற நல்ல சட்டத்தை மாற்றுவது சீர் திருத்தமாக இருக்காது’ மாறாக சீர் குலைப்பதாகவே அமையும். சில மார்க்க அறிஞர்களும் இந்தப் பிழையான நிலைப்பாட்டிற்கு ஒத்து ஊத ஆரம்பித்துள்ளனர். எனவே, இது தொடர்பான ஒரு தெளிவை வழங்குவது அவசியமாகின்றது.
அத்தியாயம் 2 வசனம் 001முதல் 029வரை தர்ஜ்மா விடியோ பார்க்க 👇👇👇👇👇
வலி’யும் குர்ஆனும்:
திருமணம் குறித்துப் பேசும் குர்ஆனின் வசனங்கள் ‘வலி’யின் அவசியத்தைத் தெளிவாக உணர்த்துகின்றன.
“எனவே, அவர்களது எஜமானர்களின் அனுமதியுடன் அவர்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள். அவர்களுக்குரிய மணக்கொடைகளை நல்ல முறையில் அவர்களிடம் கொடுத்துவிடுங்கள்.” -(4:25)
இது அடிமைப் பெண்களைத் திருமணம் செய்வது குறித்து பேசும் வசனமாகும். என்றாலும், இதைப் பொதுவான சட்டமாகவே நாம் கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில், இதற்கு அமைவாகவே இது குறித்த ஏனைய வசனங்களும் இடம் பெற்றுள்ளன.
“இணைவைக்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும்வரை மணமுடிக்காதீர்கள். முஃமினான அடிமைப் பெண், உங்களைக் கவரக் கூடிய இணைவைக்கும் பெண்ணை விடச் சிறந்தவளாவாள். இன்னும், இணைவைக்கும் ஆண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (உங்கள் பெண்களுக்கு) மணமுடித்து வைக்காதீர்கள். உங்களைக் கவரக் கூடிய இணைவைக்கும் ஆணை விட, முஃமினான அடிமை மேலானவனாவான். அவர்கள் நரகத்தின் பால் அழைக்கின்றனர். ஆனால், அல்லாஹ்வோ தனது நாட்டப்படி மன்னிப்பின்பாலும் சுவர்க்கத்தின் பாலும் அழைக்கின்றான். இன்னும் மனிதர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு தனது வசனங்களை அவர்களுக்கு அவன் தெளிவுபடுத்து கின்றான்.” -(2:221)
இவ்வசனத்தில் இணைவைக்கும் பெண்களைத் திருமணம் செய்யாதீர்கள் என்றுஆண்களைப் பார்த்துச் சொல்லப்படுகின்றது. ஆனால், இணை கற்பிக்கும் ஆண்களைத் திருமணம் செய்யாதீர்கள் என்று பெண்களைப் பார்த்துச் சொல்லாமல் இணை வைக்கும் ஆண்களுக்கு உங்கள் பெண்களை மணமுடித்துக் கொடுக்காதீர்கள் என்றும் ஆண்களைப் பார்த்துத்தான் கூறப்படுகின்றது. இந்த வசனம் பெண் தானாக திருமணம் செய்யமாட்டாள். அவளது பொறுப்பாளர்கள்தான் திருமணம் செய்விக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றது.
“ஒரு விபச்சாரன், விபச்சாரியை அல்லது இணைவைப்பவளையேயன்றி (வேறு எவரையும்) திருமணம் முடிக்கமாட்டான். ஒரு விபச்சாரி, அவளை ஒரு விபச்சாரனோ அல்லது இணைவைப்பாளனோ தவிர (வேறு எவரும்) திருமணம் முடிக்கமாட்டான். இது நம்பிக்கையாளர்களுக்குத் தடைசெய்யப்பட்டதாகும்.” -(24:3)
விபச்சாரம் செய்தவன்தான் தன்னைப் போன்ற ஒரு விபச்சாரியை மணந்து கொள்வான் என்று கூறும் வசனம் ஒரு விபச்சாரம் செய்த பெண், தான் விபச்சாரம் புரிந்தவனை மணப்பாள் என்று கூறவில்லை. இங்கும் திருமணத்தை அல்லாஹ் ஆண்களுடன் இணைத்துத்தான் பேசுகின்றான்.
“நீர் எனக்கு எட்டு வருடங்கள் கூலியாளராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் எனது இவ்விரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு நான் திருமணம் முடித்துத் தர விரும்புகின்றேன். நீர் பத்தாகப் பூர்த்தி செய்தால், அது உன் விருப்பத்தைச் சார்ந்தது. உம்மைச் சிரமப்படுத்த நான் விரும்பவில்லை. ‘இன்ஷா அல்லாஹ்” (அல்லாஹ் நாடினால்) என்னை நல்லவர்களில் நீர் கண்டு கொள்வீர் என அவர் கூறினார்.” -(28:27)
ஒரு தந்தை தனது மகளை மூஸா நபிக்கு திருமணம் முடித்து வைப்பது பற்றிய வசனம் இது. இங்கும் திருமணம் என்பது கணவன் பெண்ணின் பொறுப்பாளி சம்பந்தப்பட்டதாக பேசப்படுகின்றது. (பெண்ணின் சம்மதம் தேவை என்பது தனி விடயம்.)
“நீங்கள் (உங்கள்) மனைவியர்களை (மீளக் கூடிய) விவாகரத்து செய்து அவர்கள் தங்கள் (இத்தா) காலக் கெடுவின் எல்லையை நிறைவு செய்து (மீண்டும்) அவர்கள் தமக்குள் நல்ல முறையில் உடன்பட்டுக் கொண்டால் (அப்)பெண்கள் தங்களது கணவன்மார்களை (மறுமுறை) மண முடிப்பதை (பொறுப்புதாரிகளாகிய) நீங்கள் தடுக்க வேண்டாம். உங்களில் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்பவர் இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறார். இதுதான் உங்களுக்கு மிகத் தூய்மையானதும் பரிசுத்தமானதுமாகும். அல்லாஹ்தான் நன்கறிவான்’ நீங்களோ அறியமாட்டீர்கள்.” -(2:232)
இந்த வசனத்திற்கு அர்த்தம் செய்வதில் கருத்து வேறுபாடு உள்ளது. ஒரு பெண் தலாக் சொல்லப்பட்டு அவளது இத்தாக் காலமும் முடிந்து விட்டது. இப்போது இவர்களுக்கு மத்தியில் இருந்த திருமண உறவு முறிந்துவிட்டது. இந்த நிலையில் இருக்கும் பெண் வேறு கணவனை மணம் முடிப்பதை முந்திய கணவன் மறுக்கக் கூடாது என்பதுதான் இந்த வசனத்தின் அர்த்தமாகும் என சிலர் கூறுகின்றனர்.
மற்றும் சிலர் தலாக் சொல்லி இத்தா காலம் முடிந்தால் இருவரின் திருமண உறவும் முறிந்துவிடும். அதன் பின் அவர்கள் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் புதிதாகத் திருமணம் செய்ய வேண்டும். இவ்வாறு தலாக் கூறி இத்தாக் காலம் முடிந்த பின்னர் மீண்டும் அவ்விருவரும் உடன்பட்டு நடக்க நாடி திருமணம் செய்ய விரும்பினால் அந்தப் பெண்ணின் வலி அதற்குத் தடையாக இருக்கக் கூடாது என இந்த வசனம் கூறுவதாகக் கருதுகின்றனர். இந்த வசனம் அருளப்படக் காரணமாக இருந்த சம்பவமும் குர்ஆனின் வார்த்தைப் பிரயோகமும் இதுதான் சரியானது என்பதை உறுதிசெய்கின்றது.
முதல் சாரார் சொன்னது போல் ‘தலாக்’ கூறிய கணவன் இத்தாக் காலமும் முடிந்து விட்டால் வேறு ஆணை திருமணம் முடிப்பதைத் தடுக்க முடியாது. ஏனெனில், இத்தாக் காலம் முடிந்ததும் அவர்களுக்கிடையே உள்ள உறவும் முறிந்துவிடும். எனவே, இது ‘வலி’ பற்றித்தான் பேசுகின்றது.
அவர்கள் நல்ல முறையில் உடன்பட்டுக் கொண்டால்… என்ற வார்த்தை இத்தா முடிந்த பின்னர் அந்தப் பெண் வேறு ஒரு ஆணைத் திருமணம் செய்வது தொடர்பில் சொல்லப்பட முடியாது. ஏற்கனவே சேர்ந்து வாழ்ந்தவர்கள் தொடர்பில்தான் சொல்லமுடியும். ஏற்கனவே வாழ்ந்தவர்கள் தமக்குள் உடன்பட்டு சேர்ந்து வாழ விரும்பினால் வலியாக இருப்பவர் தடுக்கக் கூடாது என்றே இந்த வசனம் கூறுகின்றது.
தமது கணவன்மார்களைத் திருமணம் செய்வதைத் தடுக்காதீர்கள் என்ற வார்த்தைப் பிரயோகம் வேறு ஆண்களை மணம் முடிப்பதை முன்னைய கணவன் தடுப்பது பற்றி இந்த வசனம் பேசவில்லை என்பதற்கான ஆதாரமாகும். அல் குர்ஆன் மிக நுணுக்கமான வார்த்தைகளைப் பயன்படுத்தும். தலாக் சொல்லி இத்தா முடிந்த பின் தன்னை தலாக் சொன்ன முன்னைய கணவனுடன் புதிதாகத் திருமணம் செய்து சேர்ந்து வாழ பெண் விரும்பினால் வலியாக இருப்பவர் கௌரவத்துக்காக அதைத் தடுக்கக் கூடாது என்றுதான் இந்த வசனம் பேசுகின்றது.
இந்த வசனத்திற்கு அடுத்த வசனத்தில் தலாக் கூறி பிரிந்துவிட்டவர்கள் பிள்ளைக்குப் பால் கொடுப்பது பற்றிய சட்டங்கள் பேசப்படுகின்றன. அங்கே கணவன் – மனைவி என்ற வார்த்தை பயன்படுத்தப்படாமல் குழந்தையைப் பெற்றவள், குழந்தையைப் பெறக் காரணமானவர் என்ற வார்த்தைகளே பயன்படுத்தப் படுகின்றன. இங்கு கணவனைத் திருமணம் செய்வதைத் தடுக்காதீர்கள் என்று கூறப்படுகின்றது. இது அந்தப் பெண் வேறு கணவர்களை மணமுடிப்பதை தலாக் விட்டவர் தடுப்பது பற்றி பேசவில்லை. தலாக் விட்ட கணவரை மீண்டும் மணம் முடிப்பதை வலீ தடுக்கக் கூடாது என்றுதான் கூறுகின்றது.
வேறு ஆண்களைத் திருமணம் செய்வதை தலாக் விட்ட கணவன் தடுக்கக் கூடாது என்றால் அவர்கள் வேறு ஆண்களைத் திருமணம் செய்யாதீர்கள் என்றே அல்லாஹ் கூறியிருப்பான் என்பது சரி. ஆனால், அவர்கள் தமது கணவர்களைத் திருமணம் முடிப்பதைத் தடுக்காதீர்கள் என்று கூறப்படுகின்றதே! தலாக் கூறி இத்தாக் காலம் முடிந்த பின்னர் அவர்களைக் கணவர்கள் என்று குர்ஆன் குறிப்பிடுமா என்ற சந்தேகம் எழலாம்.
முன்னால் பேசப்பட்டவர் விடயமாகத்தான் அடுத்த விடயமும் பேசப்படுகின்றது என்பதைக் காட்ட இப்படிப் பாவிக்கப்படுவது இயல்பாகும். உதாரணமாக மூஸா நபியுடன் சூனியக்காரர்கள் போட்டிக்கு வந்தனர். ஈற்றில் அவர்கள் ஈமான் கொண்டு சுஜுதில் விழுந்தனர். இதைக் குர்ஆன் கூறும் போது சூனியக்காரர்கள் சுஜுதில் விழுந்தனர் என்று கூறுகின்றது. (பார்க்க: 7:120, 26:46)
அவர்கள் சுஜூதில் விழும் போது சூனியக்காரர்களாக இருக்கவில்லை. இருப்பினும் அறிமுகத்திற்காக குர்ஆன் இப்படிக் கூறுகின்றது. தலாக் விடப்பட்ட பெண்கள் தமது கணவர்களை முடிப்பதைத் தடுக்காதீர்கள் என்று இங்கே கூறப்படுவது தலாக் விட்ட முன்னைய கணவரைத் திருமணம் செய்வதை வலி தடுக்கக் கூடாது என்றே கூறுகின்றது என்பது இதன் மூலம் இன்னும் உறுதியாகின்றது.
இந்த வசனம் இறங்கியதற்கான காரணம் குறித்து ஸஹீஹ் புகாரியில் பின்வரும் சம்பவம் இடம் பெறுகின்றது.
மஅகில் இப்னு யஸார்(வ) அறிவித்தார்: “அந்த (திருக்குர்ஆன் 2:232 வது) வசனம் என்னைக் குறித்தே அருளப்பட்டது. என்னுடைய ஒரு சகோதரியை ஒருவருக்கு நான் மணமுடித்துக் கொடுத்திருந்தேன். அவளை அவர் விவாக விலக்குச் செய்துவிட்டார். அவளுடைய ‘இத்தா’க் காலத் தவணை முடிந்த போது, அவர் அவளை மீண்டும் பெண் கேட்டு வந்தார். அப்போது நான் அவரிடம், ‘நான் (என் சகோதரியை) உங்களுக்கு மணமுடித்துக் கொடுத்து மஞ்சத்திலே உங்களை இருக்கச் செய்து கண்ணியப்படுத்தினேன். ஆனால், அவளை நீங்கள் விவாகரத்துச் செய்துவிட்டு, இப்போது (மீண்டும்) அவளை பெண் கேட்டு வந்துள்ளீர்கள். இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! இனி ஒருபோதும் அவள் உங்களிடம் திரும்பமாட்டாள்’ என்று சொன்னேன். அவர் நல்ல மனிதராகத்தான் இருந்தார். என் சகோதரி அவரிடமே திரும்பச் சென்று வாழ விரும்பினாள். அப்போதுதான் அல்லாஹ், ‘…அவர்களை நீங்கள் தடுக்காதீர்கள்’ எனும் இந்த (திருக்குர்ஆன் 02:232 வது) வசனத்தை அருளினான். எனவே, நான் நபி(ச) அவர்களிடம், ‘இப்போது நான் (அல்லாஹ் கூறியபடியே) செய்கிறேன், இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறிவிட்டு, மீண்டும் அவருக்கே என் சகோதரியை மணமுடித்து வைத்தேன்.”
(நூல்: புகாரி- 5130, 4529, 5331 | அபூதாவூத்- 972, 2087 | நஸாஈ- 10974)
(இது ஸஹீஹான அறிவிப்பு என இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.)
இந்த வசனமும் இந்த சம்பவமும் பெண்ணுக்கு வலி அவசியம் என்பதை மிகத் தெளிவாக உணர்த்துகின்றன. பெண் ஏற்கனவே திருமணம் முடித்தவளாக இருந்தாலும் ‘வலி’ அவசியம் என்பதை இந்த சம்பவம் உறுதியாகக் கூறுகின்றது.
தஜ்வீத்பாடம் 21A 👇👇👇👇
சுன்னாவும் வலியும்:
சிலர் வலி தொடர்பாக வந்துள்ள அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானது என்றும் அதனால்தான் புகாரி, முஸ்லிம் இமாம்கள் இந்த ஹதீஸை பதிவிடவில்லை எனக் கூறி என்னமோ இமாம் புகாரி வலி அவசியம் இல்லை என்ற கருத்தில் இருந்தது போன்ற எண்ணத்தை பாமர மக்கள் மனதில் பதிவு செய்ய முயற்சிக்கின்றனர். இமாம் புகாரி ‘வலி இல்லாமல் திருமணம் இல்லை’ என்ற தலைப்பில் தனிப்பாடத்தையே தனது கிரந்தத்தில் இடம்பெறச் செய்திருப்பதுடன் கன்னிப் பெண்ணுக்கு மட்டுமன்றி விதவைப் பெண்ணுக்கும் வலி அவசியம் என்ற கருத்தை புகாரியில் பதிவு செய்துள்ளார்.
வலி தொடர்பில் பல்வேறுபட்ட அறிவிப்புக்கள் வந்துள்ளன. அவற்றை ஹதீஸ்துறை அறிஞர்கள் ஸஹீஹ் என்றே கூறியுள்ளனர். அதுதான் அல்குர்ஆனின் மேற்படி வசனங்களுக்கும் ஏற்றதாகும். எகிப்து போன்ற சீர்கெட்ட நாடுகளில் 18 வயதுக்கு மேல் வலி இல்லாமல் திருமணம் செய்யலாம் என்ற சட்டம் இருப்பதைச் சாட்டாக வைத்து சமூகத்தை சீர் கெடுக்க முடியாது.
வலி இல்லாமல் திருமணம் இல்லையென நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ மூஸா | நூல்: திர்மிதி- 1101, அபூதாவூத்- 2088, இப்னுமாஜா: 1881
(இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் ஸஹீஹானது என்று குறிப்பிடுகின்றார்கள்.)
எனவே, வலி இல்லாமல் திருமணம் செய்ய முடியாது என்பதுதான் சரியானதாகும்;. ஒரு பெண் வலி இல்லாமல் திருமணம் செய்யலாம் என்ற சட்டம் ஒழுக்க சீர்கேட்டை உருவாக்கும். ஓடிப் போய் குடும்பத்திற்குத் தெரியாமல் திருமணம் செய்யும் குடும்ப குத்து விளக்குகளை(?) உருவாக்கத்தான் இது உதவி செய்யும். இளம் பெண்கள் ஏமாற்றப்படும் இக்காலகட்டத்தில் இந்த சட்டத்தையும் போட்டால் குடும்பத்துக்குத் தெரியாமல் திருமணம் செய்து கற்பையும் இழந்து கைவிடப்படும் பெண்கள்தான் உருவாகுவார்கள்.
இந்தியா, போன்ற நாடுகளில் இப்படி ஏமாற்றிஅழைத்துச் செல்லப்படும் பெண்கள் விபச்சார விடுதிகளுக்கு விற்கப்படுகின்றனர். அனுபவித்த பின்னர் நடுத்தெருவில் விடப்படுகின்றனர். சில போது நண்பர்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
வலீ இல்லாமல் ஒரு பெண் தானாகவே திருமணம் செய்யலாம் என்று கூறும் பெரியவர்களே! உங்கள் மகள் அல்லது சகோதரி உங்களுக்குத் தெரியாமல் திருமணம் செய்து விட்டு வந்து இந்த நபரை நான் திருமணம் செய்துவிட்டேன் என்று உங்களிடம் கூறினால் உங்கள் உள்ளம் எந்த ‘வலி”யும் இல்லாமல் மனதார அதை ஏற்றுக் கொள்ளுமா? உள்ளத்தைத் தொட்டுச் சொல்லுங்கள்!
‘வலி’ இல்லாமல் திருமணத்தை ஆதரிக்கும் பெண்ணிலைவாதிகள் பெண்களை படுகுழியில் தள்ளும் முயற்சியில்தான் இறங்கியுள்ளனர். எனவே, ஷரீஆ ரீதியிலும் சமூக அடிப்படையிலும் தனது முடிவு சரியானதா என அவர்கள் நடுநிலையாக சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
நாங்களும் முற்போக்குவாதிகள்தான் எனக் காட்டிக் கொள்வதற்காகவும் தனிப்பட்ட ஜமாஅத் இயக்க வெறுப்புக்களை பழிதீர்ப்பதற்காகவும் இப்பிரச்சினையில் வலுவற்ற கருத்துக்களையும் சமூகத்தைப் பாதிக்கும் கருத்துக்களையும் பகிர்ந்து வரும் கலாநிதிகளும் அஷ்ஷெய்குகளும், நவீனத்துவ(?) சிந்தனையாளர்களும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கும் தன்னைத் தூக்கி நிறுத்துவதற்காகவும் களத்தில் இருக்கும் ஏனைய அமைப்புக்களை காயப்படுத்துவதற்கும் இதை ஒரு களமாகப் பயன்படுத்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
எழுதியவர்: அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஸலபி
அநியாயம் செய்பவர்களை அல்லாஹ் சில நேரங்களின் விடுவான் கடுமையாக பிடிப்பதற்காக
0 Comments