Subscribe Us

மனைவி என்ற அவள்!


பெண்ணை அல்லாஹ் மென்மையான குணம் கொண்டவளாகவும் அதிக அன்பு காட்டக் கூடியவளாகவுமே படைத்துள்ளான். அதனால் தான் அல்லாஹ்வுடைய அன்பைப் பற்றி உலக மக்களுக்கு அல்லாஹ்வ விளங்கப்படுத்தும் போது தாய்மையைப் பெற்ற மனைவியான ஒரு பெண்ணையே உதாரணத்துக்காகத் தேர்ந்தெடுத்துள்ளான். அன்புக்கு உதாரணமே ஓரு பெண்தான் என்று சொன்னால் யாரால் மறுக்க முடியும்.  

(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள்). குழந்தைகிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப்பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது ‘எங்களிடம் நபி (ஸல்) அவர்கள், ‘இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!” என்றார்கள். நாங்கள், ‘இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது” என்றுசொன்னோம். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்” என்று கூறினார்கள்.

பெண்ணிடம் அதிக அன்பையும், பாசத்தையும் கொடுத்த அல்லாஹ் அதே போன்று பிடிவாத குணத்தையும், நன்றி மறக்கும் தன்மையையும் அதிமாகவே கொடுத்துள்ளான். எல்லா மனிதர்களையும் முழுமையானவர்களாகப் படைத்திருந்தால் நன்மை, தீமை, சுவர்க்கம், நரகம், மரணம் என்று எதுவுமே தேவைப்பட்டிருக்காது. 

திருமணம் முடித்த அதிகமான ஆண்கள் பெண்ணின் குறைகளைத் தன்னுடைய நண்பர்களிடம்,  வேலைசெய்யும் இடங்களில், முகநூலில் என்று எல்லா இடங்களிலும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர். 

குறிப்பாக முகநூலில் மனைவியைப் பற்றி யாராவது ஒரு வரி சொன்னால் போதும். அவள் பிடிவாதக்காரி, கோபக்காரி, அடங்காதவள் என்று அவளால் எந்த நலவுமே கிடைக்காதது போன்றே தன் மனைவியின் குறைகளைக்கூறி முகநூலில் அவளது மானத்தை இழக்கச் செய்யும் ஆண்களுக்கு மேலே வானத்தைப் பார்த்து அழுக்குக் காரலைத் தனக்குத் தானே துப்பிக் கொள்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை போலும். முக நூலில் உள்ள நண்பர்கள் என்பது நாம் தேடிக்கொண்ட உறவுகள். அவர்கள் ஆண்களா, பெண்களா,  என்று கூடத் தெரியாது. ஆனால் நாம் பிறக்கும் போதே யார் தனக்குத் தகுதியானவள் என்பதை தீர்மானித்து அல்லாஹ்வாலே விதித்த அந்த உறவைப் பற்றி இவர்களிடம் முறையிட்டு ஆனந்தம் அடைகின்றீர்கள். இது உங்கள் மனைவிக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அல்லாஹ்விடம் எந்த ஒன்றும் மறைந்து விடாது. மறுமையில் அல்லாஹ் இது பற்றிக் கேட்டால் என்ன பதில் சொல்வது. 

கணவன், மனைவி உறவென்பது ஒரு ஒப்பந்தம் தான். அதன்மூலம் கணவனுக்கோ, மனைவிக்கோ நிம்மதி, சந்தோசம், ஆறுதல் எதுவுமே கிடைக்காவிட்டால் அவளைத் தலாக் கூறும் அனுமதியை அல்லாஹ்  வழங்கினானே தவிர அவளது குறைகளை வெளிப்படுத்த அனுமதிக்கவில்லை. 

ஒரு ஆணுக்கு நான்கு  பெண்களைத் திருமணம் செய்யச் சொன்ன இஸ்லாம் அதற்கு நிறையக் காரணங்களைச் சொல்லியுள்ளது. ஆனால் தன் மனைவியிடம் குறை இருப்பதற்காக இன்னொன்றை முடிக்கச் சொல்லவில்லை. ஒருபெண்ணிடம் குறை இருப்பதற்காக இன்னொருவரைத் திருமணம் செய்தாலும் அவளிடமும் நீங்கள் விரும்பாத குறைகள் இருக்கத்தான் செய்யும் 

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்! எனெனில் பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ பலவந்தமாக நிமிர்த்திக்கொண்டேபோனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்."(நூல்கள்: ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஏனென்றால் பெண் என்பவள் ஆணின் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளால். அவளுடைய அத்திவாரம் ஒரு ஆணிண் விலா எலும்பாகும். அந்த விலா எலும்பில் வளைவில்லாமல் இருந்தால் சில வேளை அதனால் படைக்கப்பட்ட அந்த உயிரும் வளைவுகள் இல்லாமல் இருக்கும். உதாரணமாக ஒரு வீட்டுக்கு அத்திவாரம் எந்தளவு உறுதியாக இருக்குமோ அந்தளவுக்கு வீடு உறுதியாக இருக்கும். வீட்டின் அத்திவாரத்துக்குச் சேர்க்கப்பட வேண்டிய பொருட்களைக் குறைத்து விட்டு வீட்டை எவ்வளவு உறுதியாகவும், பெரிதாகவும், அழகாகவும், நவீன டிஸைன்களில் கட்டினாலும் அந்த வீடு அதிக காலம் உறுதியாக நிற்காது. இதற்காகவீட்டையோ, ஜன்னலையோ, டைல்ஸ்ஸையோ மாற்றுவதோ, குறை கூறுவதிலோ பயனில்லை. அத்திவாரத்தைத்தான் மீண்டும் செம்மைப்படுத்த வேண்டும். அப்போதுதான் வீடு உறுதியாக மாறும்.

மனைவியைக் குறை கூறும் ஆண்களே!! நீங்கள் அவர்களின் குறைகளை மறைத்தால் அவர்களும் உங்கள்க குறைகளை மறைப்பார்கள். நீங்கள் அவர்களது குறையை உலகத்துக்கே தெரியப்படுத்தினால் அவளும் அவ்வாறே பகிரங்கப் படுத்தக்கூடியவளாக இருப்பாள் என்பதில் சந்தேகமே இல்லை. நீங்கள் கற்பைப் பேணி அவர்களுக்கு நம்பிக்கையானவர்களாக இருந்தால் தான் அவர்களும் உங்களுக்கு ஏற்றவர்களாக இருப்பார்கள். ஏனென்றால் ஜாடிக்கு ஏற்ற மூடியல்லவா தேவைப்படுகின்றது. 

தன்னிடமுள்ள அழுக்கை சுத்தப்படுத்தாமல், பெண்ணின் இயல்பான குணத்தைப் பற்றி அறியாமல் ஒன்றல்ல நான்கு பெண்களை நீங்கள் திருமணம் முடித்தாலும் இதை விட அதிகமாகவே புலம்பல்கள் இருக்கும். 

"அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மனஅமைதி பெறுவதற்காகப் படைத்தான். 

அல்குர்ஆன் 7:189.

எனவே மனைவியைப் பற்றி நாம் கூறினால் மன அமைதி பற்றி மட்டுமே பேசலாம். அவ்வாறான மன அமைதிதிருமண வாழ்க்கையில் சொல்வதற்கு இல்லையென்றால் திருமணத்தின் மூலம் இஸ்லாம் எதிர்பார்த்தவை அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

அல்லாஹ் கூறுகின்றான்.

اَلْخَبِيْثٰتُ لِلْخَبِيْثِيْنَ وَالْخَبِيْثُوْنَ لِلْخَبِيْثٰتِ‌ وَالطَّيِّبٰتُ لِلطَّيِّبِيْنَ وَالطَّيِّبُوْنَ لِلطَّيِّبٰتِ‌ اُولٰٓٮِٕكَ مُبَرَّءُوْنَ مِمَّا يَقُوْلُوْنَ‌ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ‏

கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும்; கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் தகுமானவர்கள். (அவ்வாறே) பரிசுத்தமான பெண்கள், பரிசுத்தமான ஆண்களுக்கும்; பரிசுத்தமான ஆண்கள், பரிசுத்தமானபெண்களுக்கும் தகுமானவர்கள். இத்தகைய (பரிசுத்தமான)வர்கள்தாம் (இந்த நயவஞ்சகர்கள்)   கூறும்குற்றங்குறைகளிலிருந்து பரிசுத்தமாக இருக்கின்றனர்.இவர்களுக்கு (மறுமையில்) மன்னிப்பும் உண்டு; கண்ணியமான முறையில் உணவும் உண்டு.

(அல்குர்ஆன் : 24:26)

அல்லாஹ்வின் இந்தக் கூற்றின் அடிப்படையில் பார்த்தால்  நாம் எப்படி உலகில் வாழ்கிறோமோ அதே போன்றுதான் நம் துணையும் அமையும். நாம் தொழுகையாளியாக இறையச்சமுடையவர்களாக நற்குணமுடையவர்களாக இருந்தால் தான் நமக்கும் அவ்வாறான துணை கிடைக்கும். அதுவல்லாமல் நாம் ஏனோ  தானோ என்று வாழ்ந்துவிட்டு நம் துணையை மட்டும் நூறு வீதம் நன்றாகக் குறையில்லாமல் எதிர்பார்பதென்பது எவ்வளவுமுட்டாள்தனம். 

அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்ட ஒர் கண்ணியமான உறவு இது. இதன் கண்ணியம் களையப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டியது அவர்களின் பொறுப்பில் உள்ளது. ஒரு பெண் இருபது, இருபத்தைந்து வருடங்கள் பெற்றோருடன் நிம்மதியாக சந்தோசமாக இருந்தாள் என்பதல்ல முக்கியம். திருமணத்திற்குப் பின்னுள்ளவாழ்க்கை தான் அவளது சந்தோசத்தையும், நிம்மதியையும், அமைதியையும் தீர்மானிக்கின்றது. அது கணவன்அமைவதைப் பொருத்தே தீர்மானிக்கப் படுகின்றது. வாழுகின்ற முப்பது, நாற்பது வருடங்களை சந்தோசமாகவாழ முயற்சி செய்வதே சிறந்தது. 

முகநூலில் சில ஆண்கள் தம் மனைவியைக் குறை கூறுகின்றனர். கேலி செய்கின்றனர். ஆனால் நீங்கள் மனைவியின் குறைகளை வெளிப்படுத்தும் போது உங்கள் குறைகளையும் சேர்த்தே நீங்கள் வெளிப்படுத்துகின்றீர்கள் என்பது வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்குப் புரியும். முகநூலில் ஏதாவது எழுத வேண்டும் என்பதற்காக, அதிக லைஸ் கொமண்ட் வாங்க உங்கள் அன்பு மனைவியின் குறைகளையா வெளிப்படுத்த வேண்டும்.? நேரத்தைக் கழிக்கவும், அரட்டைக்காகவும், முகநூலைப் பயன்டுத்துகின்றவர்களிடம் உங்கள் புனிதமான காதலையும், வாழ்க்கையையும் புலம்பித் தொலைத்து விடாதீர்கள்.

அல்ஹம்துலில்லாஹ் சிலர் மனைவிமார் பற்றிப் பெறுமையாகப் பேசுகின்றனர், சிலர் மெளனிகளாகஇருக்கின்றனர். அவர்களுக்குப் பிரச்சனையோ, சோதனையோ இல்லை என்பதல்ல அர்த்தம். அவர்கள்அறிவுள்ளளவர்கள். பெண்ணின் உண்மையான இயல்பைக் கண்டறிந்து அல்லாஹ்வுக்காகப் பொறுமையாக இருப்பவர்கள். கணவன் மனைவிக்கு ஆடை மனைவிக்கு கணவன் ஆடை என்ற அல்குர்ஆன் வசனத்தைவிளங்கியவர்கள். கிடைத்ததை வைத்துத் திருப்தி அடைபவர்கள்.  அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரியவேண்டும்.

கணவன் மனைவி பிள்ளைகளுக்காக கேட்க வேண்டிய துஆ

وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏

மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக்கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக(வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.

(அல்குர்ஆன் : 25:74)

- உம்மு உபாதா உஸைமீனிய்யா

விடியோ பார்க்க




Post a Comment

0 Comments